Tuesday, 23 June 2020

1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்கள் (T/M, E/M) இணையதளத்தில் பதிவேற்றம்..

E-learn TN SCHOOLS 
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது. 

அதனை பயன்படுத்தி மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களை வீடியோ மூலம் கற்கலாம். 

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடங்கள் (தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  

இணைய முகவரி:  

Thursday, 4 June 2020

தினம் ஒரு சிந்தனை

இன்றைய சிந்தனை..( 04.06.2020)..
……………………………………………......................

'' முயற்சியை கை விடாதீர்கள்..''
.........................................................

வாழ்வில் வெற்றி பெற நாம் அமைத்துக் கொண்ட வேலிகளைத் தாண்டி முயற்சிகள் செய்ய வேண்டும்....

சிலர் கடுமையாக முயற்சி செய்தும்  வெற்றி பெறாமல் இருப்பதற்கு உண்மையான காரணம் அவர்கள் வெற்றி பெறும் வரை முயற்சிப்பது இல்லை.

கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடி விடுவார்கள்.அந்த கண்ணாடியில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும்.

அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி செய்யும்..        மேலே உள்ள கண்ணாடியில் இடித்து,“ஆ! அம்மா !! வலிக்குதே, இனி மேலே நோக்கிப் போகும்போது பார்த்து போகனும் என்று தீர்மானித்து கொள்ளும்.

அதேபோல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக,வெளியே செல்ல முயற்சி செய்யும்..அதே அடி.அதே வலி. அதே தீர்மானம். இப்படியாக எல்லா திசைகளிலும், பறந்து, வெளியே செல்ல முயன்று, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து விடும்.

சரி, இதுதான் நமது வாழ்க்கை. இந்த கூண்டுக்குள்தான் இனி நம் வாழ் நாளை கழிக்க வேண்டும் போல இருக்கு. இனியும் முயற்சி செய்து பலன் இல்லை.

ஆக, இந்த கூண்டுக்குள், நாம் எப்படி மகிழ்ச்சியாக நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணத் தொடங்கி விடும்.

அதோடு கூண்டை தாண்டி வெளியே செல்லும் முயற்சியை கைவிட்டு விடும். இப்போது மேலே நோக்கி பறக்கும். சரியாக ஒரு இன்ச் தூரத்தில், பிரேக் போட்டது போல் நின்று விடும்.

இந்த தடவை, கண்ணாடியில் இடி இல்லை. வலியும் இல்லை. அதே போல், இடது பக்கம் பறக்கும். ஒரு இன்ச் தூரத்தில் நின்று விடும்.

அனைத்து பக்கங்களிலும் பறக்கும்.எந்தக் கண்ணாடியிலும் இடிக்காமல் பறக்கும்.அந்த திறமையை, வாழ்க்கை அளித்த பாடம் என்று பெருமையாக எண்ணிக் கொண்டு அந்த கூண்டிலேயே தன் மீதிநாள் வாழ்க்கையை முடித்துவிடும்.

இப்படி, அந்த பூச்சி, எந்த பக்கத்திலும் இடிக்காமல் பறப்பதை பார்த்தவுடன், அவர்கள், மேலே உள்ள கண்ணாடி, மற்றும் பக்கங்களில் உள்ள கண்ணாடியை எடுத்து விடுவார்கள்.இப்போது, மேலே கண்ணாடி இல்லை. பக்கங்களில் கண்ணாடி இல்லை.

ஆனால், அந்த பூச்சி, ஆனந்தமாக, இன்னும் அந்த ஒரு இன்ச் தூரத்தில் பிரேக் போட்டு நின்று, இல்லாத கண்ணாடிகளில் இடிக்காமல், அந்த வேலி இல்லாத பெட்டிக்குள், தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வாழும்..

அந்த பூச்சி மட்டும், பழைய வலியை மறந்து,முயற்சி செய்து இருந்தால் அந்த ஒரு இன்ச் தூரத்தை கடந்து இருக்கும்.ஒரு இன்ச் தூரத்தைக் கடந்து இருந்தால், இந்த உலகத்தையே சுற்றி வந்து இருக்கும்..

ஆம்.,அன்பு நண்பர்களே..,

தொடர்ந்து முயற்சி செய்வதை கைவிட்டு விட்டு., நம்மில் பலர், இந்த பூச்சியை போன்று தான் வாழ்ந்து கொண்டு வருகின்றோம்...

 தொடர்சியாக முயற்சி செய்பவர்கள் கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் வெற்றி பெறுவார்.எப்போதும் முயற்சியை மட்டும் விட்டு விடக்கூடாது

காலம் கடந்தாலும் பொறுமையாக முயற்சி செய்ய வேண்டும்.

முயற்சி செய்யுங்கள் ''வெற்றி'' கிடைக்கும்.
முயற்சி செய்யுங்கள் ''தோல்வியும்'' கிடைக்கும்.

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.,

'தோல்வியும் வெற்றியாக'' மாறும்........

Tuesday, 2 June 2020

தினம் ஒரு சிந்தனை



*இன்றைய சிந்தனை.( 02.06.2020)*

……………………………………………...................

''அச்சம் என்ற உணர்வு''
.....................................

ஓர் ஆபத்து நிகழப்போகிறது என்ற எண்ணம் உதித்துவிட்டாலே, அச்சம் என்பது இயல்பாகவே வந்து விடுகிறது...

இந்த உணர்வு அச்சமென்று பொதுமைப் படுத்தப்பட்டாலும் கவலை, பதற்றம், மன அழுத்தம், படபடப்பு என்று வெவ்வேறு வகைகளாக இது வெளிப்படுகிறது...

மொத்தத்தில், அச்சம் என்பது முழுக்க முழுக்க நம் மன ஓட்டம் மட்டுமே. அது வெறும் விபரீத கற்பனையால் விளைவது...

அச்சங்களின் கூடாரம், தன்னம்பிக்கையின்சேதாரம்...

தோற்று விடுவோமோ எனும் அச்சத்தில் பலர் முயற்சிக்கான முதல் அடியை எடுத்து வைப்பதில்லை...

முதல் அடியை எடுத்து வைக்காதவர் எப்போதுமே பயணம் செல்லமுடியாது என்பது பொது நியதி...

வெற்றி பெற விடாமல் நம்மைத் தடுப்பவை, 'தோல்வியடைந்து விடுவோமோ எனும் அச்சம்தான்’ என்கிறார் சேக்ஸ்பியர்.

தோல்வியும், வெற்றியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல. தோல்விகளைச் சந்திக்காத வெற்றியாளர்கள் இருக்கவே முடியாது...!

தோல்வி என்பது இயல்பானது என்பதைப் புரிந்து கொண்டாலே வெற்றிக்கான முதல் கதவைத் திறந்து விட்டோம் என்றுதான் பொருள்...

வெற்றிகளில் சிலவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். தோல்விகளில் பலவற்றைக் கற்றுக் கொள்ளலாம்...

ஆனால், தோல்வி குறித்த அச்சத்தில் முயற்சி செய்யாமல் இருப்பதோ எதையுமே, எப்போதுமே நமக்குத் தருவது இல்லை என்பதுதான் உண்மை...

விழிப்புணர்வு என்பது வேறு, அச்சம் என்பது வேறு. தோல்விகளைக் குறித்த விழிப்புணர்வு இருக்கலாம்..
ஆனால், அதுவே ஆளை விழுங்கும் அச்சமாக மாறிவிடக்கூடாது என்பதை நாம் கவனிக்க வேண்டும்...

தோல்வி குறித்த சிந்தனைகள் எச்சரிக்கை உணர்வைத் தருபவையாக இருக்கும் வரை அவை நமக்கு நன்மை தரும்...

வாகனத்தில் பயணம் செய்யும் போது விபத்து குறித்த பயத்தில் `இருக்கை வார், (seat belt)’ அணிவது எச்சரிக்கை உணர்வு...

விபத்து குறித்த அச்சத்தில் வாகனத்தையே புறக்கணிப்பது கோழைத்தனமானது. இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்...

வாழ்க்கை, பயந்தாங்கொள்ளிகளின் கைகளில் பதக்கங்களைத் திணிப்பதில்லை. தண்ணீர் குறித்த பயம் உங்களுக்கு நீச்சல் கற்றுக் கொள்ள தூண்டுதலாய் இருக்க வேண்டுமே தவிர, தண்ணீரைக் கண்டால் ஓடுகிற மனதைத் தந்துவிடக் கூடாது...

ஆம் நண்பர்களே...!

*அச்சம் நமக்கு அதைத் தாண்டிச் செல்கின்ற தகுதியை உருவாக்க தூண்டுதலாய் இருக்க வேண்டும்...*

*அதைக் கண்டு விலகி ஓடுகின்ற நிலையைத் தந்துவிடக் கூடாது...*

*மொத்தத்தில் எப்படியாவது அச்சத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வாருங்கள்.. இறுதியில் அச்சம் அர்த்தமற்றது என்று எண்ணுவீர்கள்...*


Monday, 1 June 2020

தினம் ஒரு சிந்தனை


இன்றைய சிந்தனை

*தீதும் நன்றும் பிறர்தர வாரா*

*உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?*

நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!!

 டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார்,

“சார் பின்னாடி போய் உட்காருங்க.

நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து,
விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார்.

என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்..!!

*பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!*

 *சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது...*

 *சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது.*

 *இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர்கள் விரும்புவதில்லை..*

எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் *யோசியுங்கள்*,

உங்கள் பக்கத்தில் இருப்பது *யார்..?*

 *உற்சாகமானவரா..? சுறுசுறுப்பானவரா..? நம்பிக்கையானவரா?  விரக்தி எண்ணம் உள்ளவரா?*

*இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்..!!*

*மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள்.*

எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

*லட்சியம் இல்லாத வர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள்*.

*லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.*

*உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே...!!!*

 *உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்...!!!*

எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.

*கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்...?*

யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.

*தீதும் நன்றும் பிறர்தர வாரா*