Tuesday, 30 November 2021

இன்றைய தினம்

 தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று கண்டுபிடித்த அறிவியலாளர் சர் ஜெகதீஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் - நவம்பர் 30:


வங்காளத்தின் (தற்போதைய வங்கதேசம்) விக்ரம்பூரில் பிறந்தவர். எதையும் உற்றுநோக்கும் குணமும், நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இயற்கையிலேயே இருந்தது. ஓயாமல் கேள்வி கேட்டாலும் சளைக்காமல் பதில் சொல்லக்கூடிய தந்தை கிடைத்தது அவரது அதிர்ஷ்டம்.


பட்டப்படிப்பை முடித்ததும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் கற்றார். வைஸ்ராய் சிபாரிசுடன் கல்கத்தா மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இந்தியர்கள் திறன் குறைந்தவர்கள் என்ற பிரிட்டிஷ் அரசு, அதே பதவி வகிக்கும் ஆங்கிலேயரின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்குதான் கொடுக்கப்படும் என்றது.


கஷ்டமான சூழலிலும், தன்மானத்தை விட்டுக்கொடுக்காத போஸ் 3 ஆண்டுகள் சம்பளமே வாங்காமல் வேலை பார்த்தார். அறிவாற்றல், கற்பிக்கும் திறனால் பேரும் புகழும் பெற்றார். தவறை உணர்ந்த கல்வித் துறை இயக்குநர் தனது முயற்சியால் முழு சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்தார். அவருக்கான 3 ஆண்டு ஊதியத்தையும் மொத்தமாக வழங்கியது அரசு.


இந்த பணத்தில் தன் வீட்டிலேயே ஆராய்ச்சிக்கூடம் அமைத்தார். தன் ஆயுள் முழுவதையும் ஆராய்ச்சிக்கே அர்ப்பணிப்பது என 1894-ல் முடிவெடுத்தார். முதலில் மின்சாரம் பற்றி ஆராய்ந்தார். மின் அலைகள், கம்பிகளின் உதவியின்றி பொருட்களைக் கடந்து செல்லக்கூடியவை என்று கண்டறிந்தார்.


மின்காந்த அலைகளின் பகுதி ஒளித் தன்மைகளை (quasi-optical) கண்டறியும் கருவியைக் கண்டுபிடித்தார். மிகக் குறைந்த அலை நீளம் கொண்ட நுண்ணலைகளை உருவாக்கும் இயந்திரத்தை முதன்முதலில் வடிவமைத்தார்.


போட்டோகிராபிக் கோட்பாட்டை உருவாக்கினார். இவரது ஆராய்ச்சி பற்றிய கட்டுரைகள் ராயல் சொசைட்டி இதழில் வெளிவந்தன. லண்டன் பல்கலைக்கழகம் இவருக்கு ‘டாக்டர் ஆஃப் சயின்ஸ்’ பட்டம் வழங்கியது.


பல நாடுகளின் அறிவியல் கழகங்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இந்தியாவின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. பல பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டங்களை வழங்கின. விருதுகள் குவிந்தன.


இவரது ஆராய்ச்சி தாவரவியல் பக்கம் திரும்பியது. தாவரங்களுக்கு உயிர், உணர்ச்சிகள் உண்டு என்பதை ஆதாரங்களுடன் பாரீஸ் மாநாட்டில் நிரூபித்தார். இந்த உண்மைகளை கண்கூடாகக் காட்ட உதவும் ‘ரெஸனன்ட் ரெக்கார்ட்’, ‘கிரெஸ்கோகிராப்’ ஆகிய கருவிகளை அரும்பாடுபட்டு உருவாக்கினார்.


‘ரெஸ்பான்ஸ் இன் லிவிங் அண்ட் நான் லிவிங்’, ‘த நெர்வஸ் மெக்கானிஸம் ஆப் பிளான்ட்ஸ்’ ஆகிய 2 நூல்களும் இவருக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்தன.


ஆண்டு வருமானத்தில் தனது அத்தியாவசியத் தேவைக்கு ஐந்தில் ஒரு பங்கை வைத்துக்கொண்டு எஞ்சிய தொகையை அறிவியல் பயிலும் மாணவர்களுக்குச் செலவழித்தார். இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக பல லட்சம் ரூபாய் உயில் எழுதிவைத்த இந்த தேசபக்த விஞ்ஞானி 79 வயதில் காலமானார்.


Sir Jagadish Chandra Bose,(30 November 1858 – 23 November 1937), was a Bengali polymath, physicist, biologist, biophysicist, botanist and archaeologist, and an early writer of science fiction. Living in British India, he pioneered the investigation of radio and microwave optics, made significant contributions to plant science, and laid the foundations of experimental science in the Indian subcontinent.


IEEE named him one of the fathers of radio science. Bose is considered the father of Bengali science fiction, and also invented the crescograph, a device for measuring the growth of plants. A crater on the moon has been named in his honour.

Saturday, 27 November 2021

அறிவோம் தெளிவோம்


 விமானம் செய்யப்படும் உலோகம்

பொதுவாக நிர்மாணப் பணிகளில் இரும்பும், உருக்கும் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இரும்பு கடினத் தன்மையும் பலமும் கொண்டது. ஆனால் இரும்பு துருப்பிடிக்கும். அதன் எடையும் அதிகம். விமானம் செய்வதற்கு உறுதியானதும் எடை குறைந்ததுமான உலோகம் வேண்டும். இரும்பும், அலுமினியமும் ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இரும்பின் எடையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு எடைதான் அலுமினியம் இருக்கும். ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடிய  பறக்கும் பலூன்களைத் தயாரிக்கத் தொடங்கியபோது, ஏற்ற கனமற்ற உலோகத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 


 அலுமினியம் துருப்பிடிக்காது. இரும்பு துருப்பிடித்து படல் படலாகப் பெயர்ந்து விழும். அப்போது அதன் அடியில் உள்ள படலம் மீண்டும் துருப்பிடிக்கும். அலுமினியம் பூமியில் சாதாரணமாகக் காணப்படுகிற ஒன்றுதான். இரும்பைவிட இரண்டு மடங்கு அதிகமான அலுமினியம் பூமியில் உண்டு. ஆனால் தொடக்க காலத்தில் அதை மற்ற தாதுக்களிலிருந்து பிரித்து எடுப்பது சிரமமாக இருந்தது.    அதனால் அலுமினியம் மிகவும் அதிகமான விலைக்கு விற்றது. "எலக்ட்ரோ லைட்டிக்' தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு சுத்தமான அலுமினியம் நிறையக் கிடைத்தது. அப்போதுதான் அதை விமானங்கள் செய்யப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். தொடக்க கால விமானங்கள் மரத்தால் செய்யப்பட்டன.





சுத்தமான அலுமினியத்தைப் பயன்படுத்தி விமானம் செய்ய முடியாது. அது கொஞ்சம் மென்மையாக இருக்கும். எனவே சுலபமாக வளையும்; சுருளும். 1906 - ஆம் ஆண்டு ஜெர்மன்காரர்கள் இதற்கொரு வழி கண்டுபிடித்தார்கள். அலுமினியத்தில் கொஞ்சம் "மக்னீஷியம்' சேர்த்தால் அதன் கடினத் தன்மை அதிகரிக்கும். ஆனால் எடை அதிகரிக்காது. இந்தக் கலப்பு உலோகத்திற்கு "சுராலுமின்' என்று பெயர்.




இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானியர்கள் இந்தக் கலப்பு உலோகத்தைக் கொண்டு "டிரிஜிபிள்'களைத் (கட்டுப்படுத்த முடிகின்ற ஆகாயக் கப்பல்கள் -அஐத நஏஐடந)தயாரித்தார்கள்.   அவற்றைப் பயன்படுத்தி பிரிட்டனில் குண்டுபோட்டார்கள்.


அவற்றில் ஒரு ஆகாயக் கப்பல் அங்கேயே விழுந்து உடைந்தது. ஆங்கிலேயர்கள் உடனே ரசாயனப் பரிசோதனைகள் செய்து, அந்த ஆகாயக் கப்பலைத் தயாரிக்கப் பயன்படுத்திய உலோகம் என்னவென்று கண்டுபிடித்தார்கள். அதன் பிறகு சுராலுமின் உலோகத்தைப் பரவலாக உபயோகப்படுத்தத் தொடங்கினார்கள். இன்று வாக்குவம் கிளீனர் முதல் ராக்கெட் வரை தயாரிப்பதற்கு இந்த உலோகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

இன்றைய தினம்

 ஸ்வீடனைச் சேர்ந்த வானியலாளர், இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளருமான ஆன்டர்ஸ் செல்ஷியஸ் (Anders Celsius) பிறந்த தினம் - நவம்பர் 27:


 ஸ்வீடனில் உப்சாலா என்ற இடத்தில் பிறந்தவர் (1701). தந்தை உப்சாலா பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியர். எனவே இவர் இயல்பாகவே கணிதம் மற்றும் அறிவியலில் திறமை பெற்றிருந்தார். சொந்த ஊரில் ஆரம்பக் கல்வி கற்றார்.


* அப்பா பேராசிரியராக இருந்த உப்சாலா பல்கலைக்கழகத்திலேயே இவரும் அறிவியலை முதன்மைப் பாடமாகப் படித்தார். 1730-ல் அதே பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு பல ஆய்வுகளிலும் ஈடுபட்டார்.


* பூமியிலிருந்து சூரியன் இருக்கும் தொலைவை அளப்பதற்கான புதிய முறை தொடர்பான ‘நோவா மெத்தடஸ் டிஸ்டான்டியம் சொலிஸ் ஏ டெர்ரா டிடர்மினன்டி’ என்ற ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். சூரிய உதயம் (auroral phenomena) குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார். புவிமுனைச் சுடர்வு நிகழ்வு குறித்துப் பிற விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.


* வடமுனைச் சுடர்வுக்கும் (aurora borealis) புவி காந்தப் புல மாற்றங்களுக்கும் உள்ள தொடர்பை முதலில் கூறியவர் இவர்தான். வலிமையான இந்தச் சுடர்வுச் செயல்பாட்டின்போது, காந்த ஊசிகள் பெரிய அளவில் விலக்கமடைவதை இவர் கண்டார்.


* 1730களில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது புகழ்பெற்ற பல வானியலாளர்களுடன் இணைந்து பணிபுரிந்தார். 1736-ல் ‘ஃபிரான்ஸ் அகாடமி ஆஃப் சயின்சஸ்’ ஏற்பாடு செய்த அட்சரேகையின் கோணத்தை அளவிட உருவாக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றார். பூமியின் வடிவத்தைத் தீர்மானிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்ட இவர், 1738-ல் ‘டி அப்சர்வேஷனிபஸ் ப்ரோ டெல்லுரிஸ் டிடர்மினன்டா’ என்ற நூலை வெளியிட்டார்.


* புதிய வானியல் கண்காணிப்பு நிலையம் ஒன்றை உருவாக்குவதற்காக ஏராளமாக நிதி திரட்டினார். 1741-ல் உப்சாலா வானியல் ஆய்வகத்தை நிறுவினார். அங்கு தான் மேற்கொண்ட நீண்ட ஐரோப்பியப் பயணத்தின்போது மிகவும் பாடுபட்டுச் சேகரித்த புத்தம் புதிய தொழில்நுட்பத்தாலான வானியல் கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்தினார்.


* சில குறிப்பிட்ட நட்சத்திரங்களின் பிரகாசத்தை அளக்க முதன் முதலாக வண்ணக் கண்ணாடித் தட்டுகளைப் பயன்படுத்தினார். அதுவரை வெற்றுக் கண்களால்தான் இவை மதிப்பிடப்பட்டு வந்தன.


* மேலும் ஒளிமறைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வானியல் ஆய்வு தொடர்பான கருவிகளை உருவாக்கினார். வெப்பநிலையை அளக்க 1742-ல் ஒரு அளவுகோலை உருவாக்கினார். இது முதலில் ‘ஸ்வீடிஷ் தெர்மாமீட்டர்’ எனக் குறிப்பிடப்பட்டது. பின்னர், அது இவரது பெயராலேயே உலகம் முழுவதும் ‘செல்சியஸ் அளவுகோல்’ என்று குறிப்பிடப்படுகிறது.


* ஸ்வீடன் நாட்டுப் பொது நில வரைபடத்தை உருவாக்கப் பல புவிபரப்பு அளவீடுகளைக் கண்டறிந்தார். 1941-ல் ‘அரித்மேடிக்ஸ் ஃபார் தி ஸ்வீடிஷ் யூத்’ என்ற நூலை வெளியிட்டார். ஸ்வீடன் அரசு அறிவியல் கல்விக் கழகத்தின் உறுப்பினராகவும் செயல் பட்டார். வானியலில் கிரகணங்கள் மற்றும் பல்வேறு வானியல் பொருள்களைக் குறித்தும் கண்காணிப்புகளை மேற்கொண்டார்.


* இவரது மரணத்துக்குப் பிறகு வானியல் குறித்து இவர் எழுதி வைத்திருந்த ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. 18-ம் நூற்றாண்டின் தலைசிறந்த வானியலாளர்களில் ஒருவரான ஆன்டர்ஸ் செல்ஷியஸ் 1744-ம் ஆண்டு காசநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

Sunday, 14 November 2021

இன்றைய தினம்


1922- இன்சுலின் முதன் முறையாக ஒரு மனித நோயாளிக்கு செலுகடைப்பிடிக்கப்படுகிறது.டொராண்டோ பொது மருத்துவமனையில் ஒரு 14 வயது ( ஆம்! 14 வயது தான்!!) நீரிழிவு ( சர்க்கரை) நோயாளிக்கு செலுத்தப்பட்டது. அக்காலத்திலேயே, இளவயதில் நீரிழிவு இருந்துள்ளது என்பதுடன், கி.மு.1500 இலேயே எகிப்தில் நீரிழிவு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

   அதே காலத்திய இந்திய மருத்துவர்களும் மதுமேகம் என்ற பெயரில் இந்நோயைக் குறிப்பிட்டுள்ளனர்.கி.மு 500-400 களில், சுஷ்ருதா, சாரகா ஆகிய இந்திய மருத்துவர்கள், இருவகை நீரிழிவு உள்ளதைக் கண்டுபிடித்ததுடன், முதல் வகை இளமையோடும், இரண்டாம் வகை உடல் பருமனோடும் தொடர்புடையது என்றும் பதிவு செய்துள்ளனர்.

    டயாபடீஸ் என்ற சொல் முதன்முறையாக கி.மு. 250-ல் கிரேக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு நீண்ட வரலாறு இருந்தாலும், இந்த நோய்க்கான காரணத்தை அறிய முடியாமல் மருத்துவ உலகம் தவித்தது. 1889-ல் ஆஸ்கார் மின்கோவ்ஸ்கி, ஜோசப் வோன் மெட்ரிக் ஆகியோர், நலமாக இருந்த ஒரு நாயின் உடலிலிருந்து கணையத்தை அகற்றிய போது, அதற்கு நீரிழிவு உண்டானதைக் கண்டறிந்தனர். 1910-ல் எட்வர்ட் ஆல்பர்ட், நீரிழிவு நோயாளிகள் ஒரு குறிப்பிட்ட வேதிமத்தின் பற்றாக்குறையுடனா இருப்பதை கண்டறிந்து அதற்கு இன்சுலின் என்று பெயர் சூட்டினார்.

   1921-ல் ஃப்ரடெரிக் பேண்ட்டிங், சார்லஸ் பெஸ்ட் ஆகியோர் மின்கோவ்ஸ்கியின் சோதனையை தலைகீழாகச் செய்து, அதாவது கணையத்தின் சுரப்பை நாய்க்குச் செலுத்தி நீரிழிவு கட்டுப்படுவதைக் கண்டுபிடித்தனர். இவர்கள் ஜேம்ஸ் காலிப் உதவியுடன் மாடுகளின் கணையத்திலிருந்து  சுரக்கும் இன்சுலினை எடுத்து ஆய்வுகள் மேற்கொண்டு வெற்றி பெற்றனர். அதன்பிறகு, மேற்குறிப்பிட்ட அந்த நோயாளி இந்நோயால் எப்படியும் இறந்து விடுவார் என்ற நிலையில் தான் இந்த முயற்சியை மேற்கொண்டு, அவரது உயிரையும் காப்பாற்றினார்.

    நீரிழிவுக்கு முதன்முறையாக ஒரு நம்பகமான சிகிச்சை உருவானது. பேண்ட்டிங் பிறந்த நவம்பர் 14 உலக நீரிழிவு நோய் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது

Thursday, 4 November 2021

ஏன் ? எதற்கு ? எப்படி?


       ஏன்?எதற்கு? எப்படி? 

  

கண்கொத்திப் பாம்பு சரியாக கண்களைப் பார்த்துக் கொத்துமாமே? அப்படி ஒரு பாம்பு இருக்கிறதா?


இருக்கிறது.... இல்லை.... எப்படி வேண்டுமானாலும் கூறலாம். செடிகொடி புதர் நிறைந்த பகுதிகளில் வாழும் இந்தப் பாம்பு க்ரீன்விப் ஸ்நேக் (Greenwhip snake) என்று அழைக்கப்படுகிறது. பச்சை சாட்டைப் பாம்பு என்றும் கூறலாம். சாட்டை போலவும் பச்சை நிறத்திலும் இது இருக்கும்.


இதற்குக் கோபம் வந்துவிட்டால், உடலை நீட்டி விரைத்துக் கொள்ளும் (ஒரு ஸ்பிரிங் போல). அப்போது எதிரியை நோக்கி வேகமாகப் பாயும். பளபளப்பான 

எந்தப் பொருளைப் பார்த்தாலும் இந்தப் பாம்பு அதைக் குறிவைத்துத் தாக்கும்.



எதிரியிடம் மிகவும் பளபளப்பான பகுதி எது? எல்லா உயிரினங்களுக்கும் கண்கள்தான் எப்போதும் ஈரப்பசையுடன் பளபளவென்று காட்சி தரும்.  ஆகவே, இந்தப் பாம்பின் குறி அந்தப் பளபளப்பை நோக்கித்தான் இருக்கும். ஆகவேதான் இது பெரும்பாலும் கண்களை நோக்கிப் பாய்ந்து தாக்குகிறது.


மற்றபடி, குறி பார்த்துக் கண்களைத்தான் தாக்க வேண்டும் என்ற சாபமோ குறிக்கோளோ இதுற்குக் கிடையாது. கையிலோ, தலையிலோ உடலிலோ வேறு ஏதாவது பளபளப்பான பொருள் இருந்தாலும் அதையும் நோக்கி இதன் குறி இருக்கத்தான் செய்யும்..

Wednesday, 3 November 2021

ஏன்,எதற்கு,எப்படி?

 ஏன் எதற்கு எப்படி?

கேள்வி: தபால் பெட்டிகள் ஏன் பெரும்பாலும் சிவப்பு நிறத் திலேயே அமைக்கப்பட்டுள்ளன?


பதில்: பொதுவாக நமது நாட்டில் தபால் பெட்டிகள் சிவப்பு நிறத்தில் இருப்பதற்குக் காரணம், சுதந்திரத்துக்கு முன்னர் நம்மை ஆண்டு வந்த ஆங்கிலேயர்கள்தான்.


19--ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் வரை தபால் பெட்டிகள் இங்கிலாந்தில் பச்சை நிறத்தில்தான் இருந்தன. பின்னர் சிவப்பு நிறத்துக்கு மாறின. இதற்குக் காரணம் சிவப்பு நிறம் எளிதில் அனைவரையும் கவனத்தையும் கவர்ந்து விடுவதுதான்.


ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில்தான் நவீன தபால்துறையும் இந்தியாவுக்கு வந்தது. அவர்கள்தான் தங்களது நாட்டில் உள்ளது போலவே இங்கேயும் தபால்பெட்டிகளுக்கு சிவப்பு நிறம் பூசினர். அவர்கள் ஆதிக்கம் செலுத்திய நாடுகளில் எல்லாம் தபால் பெட்டிகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்பட்டன.


ஆனால் இப்போது பல நாடுகளில் சிவப்பு, வெள்ளை, நீலம் ஆகிய நிறங்களில் தபால் பெட்டிகள் காணப்படுகின்றன. அமெரிக்காவில் தபால் பெட்டிகள் நீல நிறத்தில்தான் இருக்கும்.