Wednesday, 25 May 2022

இன்றைய தினம்

*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்* *மே – 25 - காணாமல் போகும் குழந்தை களுக்கான சர்வதேச தினம்* இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 45 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாக தேசியக் குற்றப்பதிவு ஆணையம் தெரிவிக்கின்றது. காணாமல் போகும் குழந்தை களுக்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 25ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கு அரசு மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தி இந்த தினம் கொண்டாடப்படுகிறது. *இட்டன் பாட்ஷ்* அமெரிக்காவில் 1979-ம் ஆண்டு மே 25 ம் தேதி நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இட்டன் பாட்ஷ் என்ற 6 வயது குழந்தை பள்ளிக்குச் செல்லும் வழியில் காணாமல் போய்விட்டான். இட்டன் பாட்ஷின் தந்தை, புகைப்படக் கலைஞராக இருந்ததால் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுக் குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது தீவிர தேடுதல் வேட்டையை அங்கிருந்த ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டது. ஊடக நிறுவனங்களின் இந்த நடவடிக்கையால் 1979-ம் ஆண்டில் இருந்து 1981-ம் ஆண்டு வரையில் குளம், ஆறு போன்ற இடங்களில் அடையாளம் தெரியாமல் காணாமல் போன 29 குழந்தைகள் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டது. இதனையொட்டி 1983 ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் மே 25-ம் தேதியை காணாமல் போகும் குழந்தைகளுக்கான தேசிய தினமாக அறிவித்தார். அன்றிலி ருந்து மே 25-ம் தேதி காணாமல் போகும் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. *காணாமல் போகும் குழந்தைகள்* இந்தியாவில் ஆண்டுதோறும் 45 ஆயிரம் குழந்தைகள் காணா மல் போகின்றனர் என்றும் இதில் தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்றும் தேசியக் குற்றப் பதிவு ஆணையச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் மேற்கு வங்கமும், அடுத்த இடத்தில் தமிழகமும் இருக்கிறது. *காரணம் என்ன?* குழந்தைகள் காணாமல் போவதற்குப் பல காரணங்கள் உள்ளது. தற்போது வீட்டில் பெற்றோர்கள் திட்டுவதால் கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் உடல் உறுப்புகளைத் திருடி விற்கும் சமூக விரோதிகளும் குழந்தைகளைக் கடத்துகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட வைக்க 10 வயது முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கும் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். குறிப்பாக 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தான் அதிக அளவில் கடத்தப்படுகின்றனர். “காணாமல் போன குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட் டாலும் அவர்களை மீண்டும் பெற்றோர்களிடம் ஒப்படைப்பதில் பெரும் சிரமம் உள்ளது. பல குழந்தைகள் தாங்கள் எங்கு இருந்தோம் என்பதுகூடத் தெரியாமல் உள்ளனர். மேலும் செவிதிறன் குறைபாடு, பார்வை இழந்த குழந்தைகள் மீட்கப்பட்டா லும் அவர்களை மீண்டும் சொந்த இடங்களுக்குக் கொண்டு சேர்ப்ப தில் பெரும் சிரமம் உள்ளது” *செய்ய வேண்டியது என்ன?* குழந்தைகளைத் தொலைத் தாலோ அல்லது பொது இடங்களில் தனியாக இருப்பதைக் கண்டாலோ காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். இந்தப் புகாரின் அடிப்படையில் சைல்டு ஹெல்ப்லைன் தொடர்பு கொண்டு குழந்தை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். www.trackthemissingchild.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம். குழந்தைகளைப் பாதுகாப்பதில் பெற்றோர்களுக்கு கடமை இருப்பது போல் குழந்தைகளைக் கடத்தும் சமூக விரோதிகளுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை உருவாக்கும் கடமை அரசுக்கும் இருக்கிறது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Tuesday, 24 May 2022

இன்றைய தினம்

உலகப் புகழ்பெற்ற முன்னோடி வானியலாளர் நிகோலஸ் கோபர்நிகஸ் (Nicolaus Copernicus) நினைவு நாள் - மே 24: # போலந்து நாட்டின் தோர்ன் நகரில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் (1473) பிறந்தார். தந்தை வணி கர். 10 வயதில் தந்தையை இழந்து மாமாவின் பராமரிப்பில் வளர்ந் தார். இயற்பெயர் மைகொலாஜ் கோபர்நிக். பல்கலையில் படித்தபோது, ‘நிகோலஸ் கோபர் நிகஸ்’ என்று மாற்றிக்கொண்டார். # கிரேக்க கவிதைகளை லத்தீனில் மொழிபெயர்த்தார். 18 வயதில் கிராக்கோவ் பல்கலைக்கழகத்தில் வானியல், கணிதம், தத்துவம், புவியியல், அறிவியல் பயின்றார். இங்கு இவரது ஆசிரியர் ஆல்பர்ட் ப்ரட்ஜூஸ்கியின் மீதான தாக்கத்தால் வானியலில் ஆர்வம் பிறந்தது. அதுகுறித்து ஏராளமான நூல்களை படித்தார். # கத்தோலிக்க தேவாலயங்களின் சட்ட விதிமுறைகள் குறித்து படிக்குமாறு கூறி இத்தாலிக்கு இவரை அனுப்பினார் மாமா. பொலோனா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர், தனது பெரும்பாலான நேரத்தை வானியல் ஆராய்ச்சிகளில் செலவிட்டார். # போலந்து திரும்பியவர் வார்மியாவில் உள்ள தேவாலயத்தில் பணி புரிந்தார். மாமாவின் செயலாளராகவும் அவரது தனிப்பட்ட மருத்துவ ராகவும் இருந்தார். மதப் பணிகளையும் செய்து வந்தார். ஒரு பொருளாதார வல்லுநராக அரசுப் பணிகளையும் மேற்கொண்டார். # மீண்டும் இத்தாலி சென்று, வானியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். 1514-ல் தான் எழுதிய கையெழுத்துப் பிரதி நூலை பல்வேறு வானியலாளர்கள், நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார். # எந்த தொலைநோக்கி கருவியும் இல்லாமலேயே இவரது ஆராய்ச்சி கள் நடைபெற்றன. வானியல் குறித்து அதுவரை ஏற்றுக்கொள்ளப் பட்டு வந்த புவி மையக் கோட்பாட்டை மறுத்து சூரிய மையக் கோட்பாட்டை வகுத்தார். கணித அடிப்படையில் இந்த ஆராய்ச்சிகளை இவர் மேற்கொண்டார். 7 பகுதிகள் கொண்ட சுழற்சிக் கோட்பாட்டை உருவாக்கினார். அனைத்து கோள்களும் சூரியனையே சுற்றி வருகின்றன என்பதுதான் அதில் முக்கியமானது. # சூரியனை மையமாகக் கொண்டே பூமி உள்ளிட்ட கோள்கள் இயங்குகின்றன என்ற உண்மையை உலகுக்கு எடுத்துரைத்தார். கோள்களின் பின்னோக்கிய நகர்வு, அவற்றின் ஒளி வேறுபாடுகள் ஆகியவற்றையும் விளக்கினார். விண்மீன்கள் அமைந்துள்ள இடங்களை வரையறுத்துக் கூறினார். # அவர் வாழ்ந்த காலத்தில் இந்த கோட்பாடுகள், கண்டுபிடிப்புகள் பெரிதாக கொண்டாடப்படவில்லை. இவரது காலத்துக்குப் பிறகே இவரது கோட்பாடுகளை கலிலியோ உள்ளிட்ட பிரபல வானியலாளர்கள் ஏற்றுக்கொண்டு, அதுபற்றி பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். இவரது சூரிய மையக் கோட்பாடுகள் வானியல் வளர்ச்சிக்கு வித்திட்டன. # ‘ஆன் தி ரெவல்யூஷன் ஆஃப் தி ஹெவன்லி ஸ்பியர்ஸ்’ என்ற நூலில் தனது ஆய்வுகள் குறித்து எழுதியுள்ளார். இதில் பூமி தனது அச்சில் சுழல்கிறது என்பதையும் பூமியை சந்திரன் சுற்றி வருகிறது என்றும் துல்லியமாக குறிப்பிட்டிருந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பே இவர் எழுதிய இந்த நூல், இவர் மரணப் படுக்கையில் இருந்தபோதுதான் வெளியானது. # வானியல் ஆய்வாளராக மட்டுமல்லாமல், சட்ட நிபுணர், மருத்துவர், பழங்கலை அறிஞர், மதகுரு, ஆளுநர், அரசுத் தூதர் என பல்வேறு களங்களில் செயல்பட்ட நிகோலஸ் கோபர்நிகஸ் 70-வது வயதில் மறைந்தார்.

Saturday, 21 May 2022

இன்றைய தினம்

*புதைபடிம ஆராய்ச்சி* என்ற புதிய அறிவியல் துறை உருவாக வழியமைத்துக் கொடுத்த தொல்பொருள் ஆய்வாளர் மேரி அன்னிங் (Mary Anning) பிறந்த நாள் - மே 21:
# இங்கிலாந்தின் டார்செட் நகரில் (1799) பிறந்தார். மேரி 15 மாதக் குழந்தையாக இருந்தபோது, அவளை வைத்துக்கொண்டு மரத்தடியில் பக்கத்து வீட்டுப் பெண்கள் பேசிக்கொண்டிருந்தனர். அந்த மரம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. மற்றவர்கள் அனைவரும் இறந்துபோக, குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. # அந்த விபத்துக்குப் பிறகு குழந்தையிடம் நிறைய மாற்றங்கள் காணப்பட்டதாகவும், சாதாரணமாக இருந்த குழந்தை அதன் பிறகு, புத்திசாலித்தனமாக மாறிவிட்டதாகவும் ஊர் மக்கள் கருதினர். வறுமை காரணமாக மேரியால் முறையான கல்வி கற்க முடியவில்லை. தேவாலயத்தில் எழுதப் படிக்கக் கற்றாள். # தந்தை மரச்சாமான்கள் தயாரிப்பவர். மற்ற நேரங்களில், புதைபடிமங்களை சேகரித்து அவற்றை சுற்றுலா பயணிகளிடம் விற்பார். சிப்பி, சங்குகளை சேகரிக்க, தந்தையுடன் மேரியும் செல்வாள். அவளது 11-வது வயதில் தந்தை இறந்தார். # பண்டைய விலங்குகளின் எலும்புகள் உட்பட பல அரிய வகை தொல்படிமங்களை சேகரிப்பதில் மெல்ல மெல்ல மேரியும் நிபுணத்துவம் பெற்றார். பல முக்கியத்துவம் வாய்ந்த தொல்படிமங்களை கண்டறிந்தார். 1823-ல் முதன்முதலாக ப்ளிசியோசரஸ் என்ற அரிய விலங்கின் முழு எலும்புக்கூட்டை கண்டறிந்தார். பறக்கும் ஊர்வன வகை டிராகான் எலும்பை 1828-ல் கண்டெடுத்தார். அடுத்த ஆண்டில் ஸ்கொலராஜா என்ற அரிய வகை மீனின் எலும்புக்கூட்டை தோண்டியெடுத்தார். # குறைவாகவே கல்வி கற்றிருந்தாலும், இரவல் வாங்கியே ஏராளமான நூல்களைப் படித்தார். அதில் இருந்து முக்கியமான விவரங்களை குறிப்பு எழுதி வைத்துக்கொள்வார். தான் கண்டறிந்த தகவல்களையும் தொகுத்து எழுதுவார். # புவி வரலாறு, பண்டைய உயிரினங்களின் வரலாறு குறித்து பல விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தார். ஒரு எலும்புக்கூட்டை பார்த்தாலே, அது எந்த வகை உயிரினத்தை சேர்ந்தது என்று கூறும் அளவுக்கு நுட்பமான அறிவு கொண்டிருந்தார். # அந்த காலகட்டத்தில் மக்கள் மத்தியில் புதைபடிமம் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருந்தது. இவரது கண்டுபிடிப்புகளுக்குப் பிறகுதான், புதிதாக இதுதொடர்பான ஆராய்ச்சித் துறை உருவானது. புதைபடிமங்களைத் தேடும் பணி உலகம் முழுவதும் தொடங்கியது. # வறுமையால் பெரிய அளவிலான ஆராய்ச்சிகளில் இவரால் ஈடுபட முடியவில்லை. ஆனால், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் புதைபடிவ ஆராய்ச்சியாளர்கள் பலர் இவரை சந்தித்து சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டனர். # தான் சேகரித்த அரிய வகை சிப்பிகள், சங்குகள், ஏராளமான தொல்படிமங்களைக் கொண்டு ஒரு விற்பனை நிலையத்தை தொடங்கினார். மேரியை கவுரவ உறுப்பினராக டார்செட் கவுன்ட்டி மியூசியம் அங்கீகரித்தது. # புதைபடிம ஆராய்ச்சி என்ற புதிய அறிவியல் துறை உருவாகக் களம் அமைத்து தந்து, பழைய சரித்திரத்தை எதிர்வரும் தலைமுறைகள் அறிந்துகொள்ள வழியமைத்துக் கொடுத்த சாதனை மங்கையான மேரி அன்னிங், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 48-வது வயதில் (1847) மறைந்தார்.

Friday, 20 May 2022

இன்றைய தினம்

இன்றைய தினம் மே 20 1873-ரிவிட்டுடன்கூடிய தற்கால ஜீன்ஸ் ஆடைக்கு லீவி ஸ்ட்ராஸ், ஜாக்கோப் டேவிஸ் ஆகியோர் அமெரிக்காவில் காப்புரிமை பெற்றனர். உண்மையில் ஜீன்சி ன் பிறப்பிடம் அமெரிக்கா அல்ல, இத்தாலியின் ஜெனோவா நகரில், கடுமையான உடலுழைப்பு பணிகளில் ஈடுபடுகிற தொழிலாளர்களுக்கான, உறுதியான உடையாக இது உருவாக்கப்பட்டது. சுமாரான தரத்துடன், குறைவான விலை கொண்ட கார்ட்ராய்ட் வகை துணியில் அங்கு உருவாக்கப்பட்ட ஜீன்ஸ், 17-ம் நூற்றாண்டில் வடக்கு இத்தாலிய தொழிலாளர்களின் முக்கிய உடையாக இருந்தது. மலிவான டுங்கரீ என்ற துணியும் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. இது இந்தியாவில் மும்பைக்கருகிலுள்ள டோங்ரி என்ற கிராமத்தில் உருவாகி ஏற்றுமதி செய்யப்பட்டது. டோங்ரிதான், டுங்கரீயாக மருவியதாகக் கருதப்படுகிறது. ஸ்விட்சர்லாந்திலிருந்து ஜெனோவாவுக்கு வந்த ஜீன்-காப்ரியேல் ஜனார்ட்- தான் 1795-ல் முதன்முதலில் ஜீன்ஸ் என்ற பெயரைப் பயன்படுத்தினார். 1800-ல் மாசெனா என்ற தளபதியின் கீழ் நெப்போலியனின் படைகள் ஜெனோவாவை முற்றுகையிட்டபோது, படைகளுக்கு தேவையான பொருட்களை வழங்கும் பணி ஜீன்- காப்ரியேலுக்கு கிடைத்தது. அவர் ஜெனோவாவின் பிரெஞ்சுப் பெயரான ஜீன்ஸ் என்பதை குறிக்கும் வண்ணம், ப்ளூ- ஜீன்ஸ் என்ற பெயரில் சீருடைகளைத் தைத்துதந்ததையடுத்து, அப்பெயரே நிலைத்து விட்டது. பிரான்சின் நைம்ஸ் நகரில் ஜெனோவாவில் பயன்படுத்தப்படும் துணியைப் போன்று உருவாக்க முயன்று, தற்போதைய டெனிம் துணியை உருவாக்கினார்கள். நைம்சிலிருந்து வந்தது என்ற பொருளில் டி- நைம்ஸ் (டெனிம்) என்று அழைத்ததால் டெனிம் என்ற பெயர் உருவானது. ஜெர்மனியரான லீவி ஸ்ட்ராஸ்,1851-ல் அமெரிக்காவுக்கு வந்து வியாபாரம் தொடங்கினார். இவரிடம் ஜீன்சுக்கான துணியை வாங்கிக் கொண்டிருந்த (லாட்வியாவிலிருந்து அமெரிக்கா வந்தவரான) ஜாக்கோப் டேவிஸ், கடுமையான உழைப்பாளிகள் பயன்படுத்தும் உறுதியான ஜீன்சில், தையல் விட்டுப்போகிற சில இடங்களில் ரிவிட் பொருத்தினால் உறுதியாக இருக்கும் என்று கூறியதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதற்கே இவர்கள் காப்புரிமை பெற்றனர். தொடக்கத்தில் நீலநிறத்திற்கு, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இண்டிகோ பயன்படுத்தப்பட்டாலும், பின்னர் ஜெர்மனியில் செயற்கை இண்டிகோ உருவாக்கப்பட்டது. பிற்காலத்தில் பிற வண்ணங்களிலும் ஜீன்ஸ் உருவாக்கப்பட்டது.

Thursday, 19 May 2022

இன்றைய தினம்

இன்றைய தினம் மே 19 1911- பார்க்ஸ் கனடா என்ற தேசியப் பூங்காத் துறை கனடாவில் தொடங்கப்பட்டது. இது தான் உலகிலேயே முதலாவது தேசியப் பூங்காவுக்கான ஓர் அரசுத் துறையாகும். தேசியப் பூங்கா என்பது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒத்த, இயற்கையைப் பாதுகாக்கும் அமைப்பாகும். இவை விலங்குகளையும் இயற்கை சூழ்நிலைகளையும் பாதுகாப்பதற்காக, இயற்கையாக அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட பகுதிகளாகும். இவற்றுக்கான வரையறை ஒவ்வொரு நாட்டிலும் வேறுபட்டாலும், இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம் (IUCN-International Union for Conservation of Nature) பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையம் ஆகியவை, ஆயிரம் ஹெக்டேருக்கு குறையாத பகுதி, சட்டப்படியான பாதுகாப்பு அளிக்கப்படுதல், அணைகள் கட்டுவது உட்பட இயற்கை வளங்களைப் பாதிக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை ஆகியன உள்ளிட்ட சில அடிப்படைக் கூறுகளை வரையறுத்துள்ளன. இவையனைத்திற்கும் ஒரே பொதுவான நோக்கம் வனத்தையும், இயற்கையையும் பாதுகாப்பது தான். உலகின் முதல் தேசியப் பூங்காவாக 1872-ல் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா குறிப்பிடப்படுகிறது. இது உருவாவதற்கு காரணமாக இருந்த ஜான் ம்யூர் என்பவர், தேசியப் பூங்காக்களின் தந்தை என்று போற்றப்படுகிறார். இதற்கு முன்பே 1778-ல் மங்கோலிய அரசு உருவாக்கிய ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி, தேசிய பூங்காவுக்கான தற்போதைய வரையறைகளுக்கு தகுதி பெறுவதாகவே உள்ளது. 2006 வரை இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசியப் பூங்காக்கள் 6,555. உலகின் மிகப்பெரிய தேசியப் பூங்காவாக வடகிழக்கு கிரீன்லாந்து தேசியப் பூங்கா விளங்குகிறது. இந்தியாவில் ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா, முதுமலை உள்ளிட்ட 102 தேசியப் பூங்காக்கள் ஐயூசின் தகுதி பெற்றவையாக உள்ளன. தேசியப் பூங்காவுக்கான துறையை முதலில் தொடங்கிய நாடான கனடா தான் உலகிலேயே மிக அதிக அளவாக சுமார் 38 லட்சம் சதுர கிலோமீட்டர் பாதுகாக்கப்பட்ட பகுதியைக் கொண்ட நாடாக விளங்குகின்றது.