இன்று மே 31ம் நாள் உலக புகையிலை எதிர்ப்பு நாள். புகையிலை குறித்தும் புகைப்பதனால் ஏற்படும் பாதிப்புக்களை பற்றியும் இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நாளை புகையிலை எதிர்ப்பு நாளாக உலகெங்கும் கடைபிடிக்கின்றனர். புகைப்பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாலும் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் தினமும் 2465 பேர் வீதம், ஆண்டுதோறும் 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோயால் இறக்கின்றனர். இந்தியாவில் 2021ல் 18 லட்சம் இறப்பார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. இன்றைக்கு புகைப்பதை ஆண்மையின் கம்பீரமாக கருதும் இளைய தலைமுறையினர் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். வருங்கால சமுதாயத்தினர் புகையை உயிரைக் கொல்லும் பகையாக கருதி விட்டுவிட வேண்டும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரை
Monday, 31 May 2021
Saturday, 29 May 2021
இன்றைய தினம்
‘கடவுள் துகள்’ எனப்படும் போசான் துகளை கண்டறிந்தவரும், நோபல் பரிசு பெற்ற இங்கிலாந்து விஞ்ஞானியுமான பீட்டர் வேர் ஹிக்ஸ் (Peter Ware Higgs) பிறந்த நாள் - மே 29:
இங்கிலாந்தின் நியூகேஸில் டைன் பகுதியில் (1929) பிறந்தார். தந்தை பிபிசி நிறுவனத்தில் ஒலிப்பதிவு பொறியாளர். அவரது பணி இடமாற்றம் மற்றும் சிறுவனான இவரது உடல்நிலை காரணமாக தொடக்கக் கல்வி முறையாக கிடைக்கவில்லை.
வீட்டிலேயே பெற்றோரிடம் கல்வி கற்றார். பிரிஸ்டலில் இருந்த கோதம் கிராமர் பள்ளியில் 12 வயதில் சேர்ந்தார். பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் குவான்டம் மெக்கானிக்ஸ் துறையில் சாதனை படைத்திருந்ததால், அத்துறை மீது இவருக்கு அதிக நாட்டம் ஏற்பட்டது.
சிட்டி ஆஃப் லண்டன் பள்ளியில் கணிதத்தை சிறப்பு பாடமாக எடுத்து பயின்றார். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் சேர்ந்து, இயற்பியலில் பட்டம் பெற்றார். பின்னர், முதுகலைப் பட்டமும், ரிசர்ச் ஃபெல்லோஷிப்பும் பெற்றார்.
மூலக்கூறு அதிர்வுகள் தொடர்பாக ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்து, 1954-ல் முனைவர் பட்டம் பெற்றார். சீனியர் ரிசர்ச் ஃபெல்லோவாக எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். லண்டன் இம்பீரியல் கல்லூரி, லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் தற்காலிக விரிவுரையாளராக சேர்ந்து கணிதம் கற்பித்தார்.
மீண்டும் எடின்பர்க் பல்கலைக்கழகம் திரும்பியவர், அங்கு கணித இயற்பியலில் விரிவுரையாளராக சேர்ந்து, ரீடராக பதவி உயர்வு பெற்றார். பின்னர், கோட்பாட்டு இயற்பியல் துறைத் தலைவராக பதவியேற்று, 1996-ல் ஓய்வு பெறும் வரை அங்கு பணியாற்றினார்.
எடின்பர்க் ராயல் சொசைட்டியில் ஃபெல்லோவாக 1983-ல் நியமிக்கப்பட்டார். அணுத்துகள் ஆராய்ச்சியில் இருந்த ஆர்வம் காரணமாக, ஐரோப்பிய அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் இணைந்தார்.
போசான் துகள்கள் குறித்து 1960-களில் ஆராய்ச்சி மேற்கொண்டார். ஆய்வு முடிவுகளை ஐரோப்பிய இயற்பியல் இதழில் ‘ஃபிசிக்ஸ் லெட்டர்ஸ்’ என்ற தலைப்பில் வெளியிட்டார். தனியாகவும், பல்வேறு ஆய்வுக் குழுக்களில் இணைந்தும் பணியாற்றினார்.
பெல்ஜியம் நாட்டின் விஞ்ஞானி எங்லெட்ர்டுடன் இணைந்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல ஆண்டுகளாக ஆராயப்பட்டு வரும் போசான் துகள்கள் குறித்து ஆராய்ந்தார். இது தற்போது இவரது பெயரால் ‘ஹிக்ஸ் போசான்’ துகள் எனக் குறிப்பிடப்படுகிறது.
ஹிக்ஸ் போசான் துகள் மற்றும் அதுதொடர்பான ஆராய்ச்சிகளுக்காக எங்லெர்ட்டுடன் இணைந்து 2013-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். இதுதவிர, ஹியூஸ் பதக்கம், ரூதர்ஃபோர்டு பதக்கம், டிராக் பதக்கம், வுல்ஃப் பரிசு, ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமியின் பதக்கம், எடின்பர்க் ராயல் சொசைட்டி பதக்கம், காப்ளே பதக்கம் உட்பட ஏராளமான பரிசுகள், விருதுகள், கவுரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
‘கடவுள் துகள்’ என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போசான் துகள் கண்டுபிடிப்பில் முக்கியப் பங்கு வகித்த பீட்டர் ஹிக்ஸ் இன்று 87-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் வசிக்கும் இவர், தற்போதும் பல குழுக்களுடன் இணைந்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
Sunday, 9 May 2021
இன்றைய தினம்
இன்று 9-5-2021( மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை ) அன்னையர் தினம்
----------------------------------------
அன்னையின் பெருமையைப் போற்றுவதற்குத்தான் அகிலத்தில் ஒரு நாளை அன்னையர் தினம் என்று கொண்டாடி வருகிறோம். இது முதன் முதலில் அமெரிக்காவில் தான் கொண்டாடப்பட்டது.
ஒரு மகள் தன் அன்னை மேல் வைத்திருந்த பற்றும் பாசமும் தான் அன்னையர் தினம் கொண்டாட காரணமாக அமைந்தது. அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா மாநிலத்தில் 'கிராப்டன்' என்ற சிற்றூரில் ஆன் ரீவ்ஸ் ஜார்விஸ் என்ற பெண் வாழ்ந்து வந்தார். இவர் ஒரு சமூக சேவகி. அக்காலத்தில் நடந்த போர் ஒன்றில் பலியான அமெரிக்க வீரர்களின் குடும்பங்கள் கவனிப்பாறின்றி சிதறிப் போய்விட்டன. அப்படி பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்த்து அவர்களின் அமைதியான வாழ்க்கைக்கு அரும்பாடு பட்டவர் அவர். அந்த சமூக சேவகி 1904-ம் ஆண்டு மறைந்துவிட்டார். அவரது ஒரே மகள்தான் 'அனா ஜார்விஸ்' என்பவர்.
அவர் முதன் முதல் தன் அன்னையின் நினைவாக உள்ளூரில் (கிராப்டன் ) உள்ள "மெத்தடிஸ்ட்" என்ற தேவாலயத்தில் 1908-ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார். தன் அன்னையைப் போற்றி அன்னையர் தினத்தை கொண்டாடிய முதல் பெண் இவர் தான்.
அதன்பின் 1913-ம் ஆண்டில் "அனாஜார்விஸ்" பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிலடெல்பியாவில் குடியேறி, தன் தாய் விட்டுச் சென்ற சமூக சேவையைத் தொடர்ந்து செய்து வந்தார். ஒவ்வொருவரும் அவரவரின் அன்னையைப் போற்றும் வகையில் ஆண்டுக்கொரு நாளை அன்னையர் தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று பென்சில்வேனியா மாநில அரசுக்கு கடிதம் எழுதினார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913-ம் ஆண்டு அன்னையர் தினத்தை அங்கீகரித்தது. மேலும் "அனாஜார்விஸ்" அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் அன்னையர் தினத்தை கொண்டாடவும் அந்த நாளை அரசாங்க விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அமெரிக்க குடியரசுத் தலைவருக்கும் இந்த வேண்டுகோளை விடுத்தார். அமெரிக்க குடியரசுத் தலைவராக அப்போதிருந்த உட்ரோ வில்சன் அதை ஏற்றுக் கொண்டு 1914-ம் ஆண்டு, ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பை அமெரிக்க காங்கிரஸ் முதலில் ஏற்றது. பின்னர் கனடா நாடு ஏற்றுக் கொண்டது. அதன்பின் 46 நாடுகள் அதேநாளில் அன்னையர் தினம் கொண்டாடப்படும் என்று அறிவித்தது. இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அனாஜார்விஸ் முயற்சியால் இன்று அகிலமெல்லாம் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது என்றாலும் அனாஜார்விஸ் திருமணம் செய்து கொள்ளாதவர். குழந்தைகள் பெற்றுக் கொள்ளாதவர். தாம் அன்னையாகாவிட்டாலும் உலகினில் வாழும் அன்னையர்களுக்காக அரும்பாடு பட்டவர். அவரும் 84 வயதில் மறைந்து விட்டார்.
அப்படிப் பட்ட அனா ஜார்விஸை இந்த நாளில் நினைவு கூர்வதுடன் நம்மைப் பெற்றெடுத்த தாய் தந்தையரை இந்த ஒரு நாள் மட்டும் போற்றாமல் நாம் வாழுகின்ற காலம் வரை வைத்து போற்றுவோம் என்று உறுதி கொள்வோம்.