உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
மனித இனத்தின் பெருங்கொடை இயற்கை வளங்கள்தான். மனிதன் இயற்கையை சார்ந்தே வாழ்ந்து வருகிறான். இயற்கை வளங்கள், மனிதன் உயிர் வாழ பல அற்புதங்களை நமக்கு அளித்து வருகின்றன. நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான மூலப்பொருள்களையும் இயற்கை தருகிறது. இயற்கை வளமிக்க பசுமையான சோலைகள், காடுகள், மரங்கள், உயிரினங்கள், புல்வெளிகள், விளைநிலங்கள், ஆறுகள், ஏரிகள், கடலோர நீர் வளம் போன்றவை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று. எனவே, இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட. இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவை அழிவதைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
