இன்று 9-5-2021( மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை ) அன்னையர் தினம்
----------------------------------------
அன்னையின் பெருமையைப் போற்றுவதற்குத்தான் அகிலத்தில் ஒரு நாளை அன்னையர் தினம் என்று கொண்டாடி வருகிறோம். இது முதன் முதலில் அமெரிக்காவில் தான் கொண்டாடப்பட்டது.
ஒரு மகள் தன் அன்னை மேல் வைத்திருந்த பற்றும் பாசமும் தான் அன்னையர் தினம் கொண்டாட காரணமாக அமைந்தது. அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா மாநிலத்தில் 'கிராப்டன்' என்ற சிற்றூரில் ஆன் ரீவ்ஸ் ஜார்விஸ் என்ற பெண் வாழ்ந்து வந்தார். இவர் ஒரு சமூக சேவகி. அக்காலத்தில் நடந்த போர் ஒன்றில் பலியான அமெரிக்க வீரர்களின் குடும்பங்கள் கவனிப்பாறின்றி சிதறிப் போய்விட்டன. அப்படி பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்த்து அவர்களின் அமைதியான வாழ்க்கைக்கு அரும்பாடு பட்டவர் அவர். அந்த சமூக சேவகி 1904-ம் ஆண்டு மறைந்துவிட்டார். அவரது ஒரே மகள்தான் 'அனா ஜார்விஸ்' என்பவர்.
அவர் முதன் முதல் தன் அன்னையின் நினைவாக உள்ளூரில் (கிராப்டன் ) உள்ள "மெத்தடிஸ்ட்" என்ற தேவாலயத்தில் 1908-ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார். தன் அன்னையைப் போற்றி அன்னையர் தினத்தை கொண்டாடிய முதல் பெண் இவர் தான்.
அதன்பின் 1913-ம் ஆண்டில் "அனாஜார்விஸ்" பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிலடெல்பியாவில் குடியேறி, தன் தாய் விட்டுச் சென்ற சமூக சேவையைத் தொடர்ந்து செய்து வந்தார். ஒவ்வொருவரும் அவரவரின் அன்னையைப் போற்றும் வகையில் ஆண்டுக்கொரு நாளை அன்னையர் தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று பென்சில்வேனியா மாநில அரசுக்கு கடிதம் எழுதினார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913-ம் ஆண்டு அன்னையர் தினத்தை அங்கீகரித்தது. மேலும் "அனாஜார்விஸ்" அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் அன்னையர் தினத்தை கொண்டாடவும் அந்த நாளை அரசாங்க விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அமெரிக்க குடியரசுத் தலைவருக்கும் இந்த வேண்டுகோளை விடுத்தார். அமெரிக்க குடியரசுத் தலைவராக அப்போதிருந்த உட்ரோ வில்சன் அதை ஏற்றுக் கொண்டு 1914-ம் ஆண்டு, ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பை அமெரிக்க காங்கிரஸ் முதலில் ஏற்றது. பின்னர் கனடா நாடு ஏற்றுக் கொண்டது. அதன்பின் 46 நாடுகள் அதேநாளில் அன்னையர் தினம் கொண்டாடப்படும் என்று அறிவித்தது. இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அனாஜார்விஸ் முயற்சியால் இன்று அகிலமெல்லாம் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது என்றாலும் அனாஜார்விஸ் திருமணம் செய்து கொள்ளாதவர். குழந்தைகள் பெற்றுக் கொள்ளாதவர். தாம் அன்னையாகாவிட்டாலும் உலகினில் வாழும் அன்னையர்களுக்காக அரும்பாடு பட்டவர். அவரும் 84 வயதில் மறைந்து விட்டார்.
அப்படிப் பட்ட அனா ஜார்விஸை இந்த நாளில் நினைவு கூர்வதுடன் நம்மைப் பெற்றெடுத்த தாய் தந்தையரை இந்த ஒரு நாள் மட்டும் போற்றாமல் நாம் வாழுகின்ற காலம் வரை வைத்து போற்றுவோம் என்று உறுதி கொள்வோம்.
No comments:
Post a Comment