நினைவலைகள்
ஜனவரி-31
1915- பெரிய அளவில் வேதியியல் ஆயுதம், முதன் முறையாக முதல் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டது. பாலிமோவ் சண்டையில் போலந்தில் ரஷ்ய நிலைகளுக்கெதிராக ஜெர்மனியால் வீசப்பட்ட ஸைலைல் ( மெத்தில் பென்சைல் ) ப்ரோமைட், ஆவியாதற்கு பதிலாக, ரஷ்ய குளிருக்கு உறைந்து விட்டதால் செயல்பாடவில்லை.
உண்மையில் முதல் உலகப் போரிலேயே, அதற்கு முன்பாகச் சிறிய அளவில் வேதியியல் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதுடன், அவற்றின் தொடக்கமும் பண்டைய காலத்திலேயே நிகழ்ந்து விட்டது. கி.மு.590- களில் எதிரிகளின் நீராதாரங்களை, நஞ்சுள்ள ஹெலிபோர் செடியின் வேர்களைப் பயன்படுத்தி ஏதென்சில் கிரேக்கர்கள் நஞ்சாக்கியதே, உலகின் முதல் பதிவு செய்யப்பட்ட வேதியியல் ஆயுதமாக குறிப்பிடப்படுகிறது. ஸ்பார்ட்டாவினர் ஏதென்ஸின் மீது கந்தகக் கலவையை எரியூட்டி வீசியிருக்கிறார்கள். உணவையும், நீரையும் நஞ்சாக்குவதைப் போர்முறையாக மனுதர்மம் குறிப்பிட்டுள்ளது. சீனாவிலும் நச்சுப் புகைகளை உருவாக்குவதற்கான குறிப்புகள் கிடைத்துள்ளன.
கி.பி.3ம் நூற்றாண்டின் ரோம- பாரசீகப் போர்களில் தகர்க்கப்பட்ட சுரங்கப் பாதைகள், வேதிமங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்துள்ளவையே மிகப் பழைய வேதியியல் தாக்குதல் எச்சங்களாகும்.போர்க்களத்தில் வேதிமங்களைப் பயன்படுத்தி மூட்டப்படும் தீ, கிரேக்கத் தீ என்று குறிப்பிடுகிறது. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களிலும், இவ்வாறு தீ பயன்படுத்தப் பட்டிருந்தாலும்,1993-ல் கையெழுத்திடப்பட்ட வேதியியல் ஆயுதங்கள் உடன்படிக்கையில், தீயை மூட்டக்கூடிய வெள்ளை பாஸ்பரஸ், நேப்பாம் ஆகியவற்றுக்கும், உயிரியல் ஆயுதங்களுக்கும் விலக்களிக்கப்பட்டுள்ளது.
முதல் உலகப் போரில் முதலில் வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்தியது பிரான்ஸ் தான். அது பயன்படுத்தியது கண்ணீர்ப்புகை வகையிலான வேதிமங்களே தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டாலும், 1915 ஏப்ரலில், மூச்சு திணறலை ஏற்படுத்தி உயிரிழைப்பை விளைவிக்கும் குளோரின் வாயுவை ஜெர்மனி பயன்படுத்தியது. 1899-ன் ஹேக் பிரகடனம்,1907-ன் ஹேக் ஒப்பந்தம் ஆகியவை போர்களில் நச்சு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை தடை செய்திருந்தாலும், முதல் உலகப் போரில் 50,965 டன் வேதிமங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தான் அதிக வேதிமங்களைப் பயன்படுத்தியது என்பதும், கொலைக் கூடங்களில் நச்சு வாயுக்களைப் பயன்படுத்திய ஹிட்லர், போரில் பயன்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கவை. நேப்பாமுக்கு விலக்கு அளிக்கப்படாவிட்டால், வியட்நாமின் மீது மட்டும் 3,80,000 டன் நேப்பாமைக் கொட்டிய அமெரிக்காவே, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் மிக அதிக வேதியியல் ஆயுதங்களைப் பயன்படுத்திய நாடாக இருக்கும்!
நன்றி R.K.
No comments:
Post a Comment