Tuesday, 16 August 2022

இன்றைய தினம்


*ஆகஸ்ட் – 16 -1845 - இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற; வெள்ளொளியில் அடங்கிய பல்வேறு நிறங்களைப் பயன்படுத்தி வண்ணப் புகைப்படங்கள் எடுக்கலாம் என உலகிற்கு அறிவித்து அதை செயல்படுத்தியும் காட்டிய ”காபிரியேல் லிப்மன்” (Gabriel Lippmann) பிறந்ததினம்*

ஃப்ரெஞ்சு அறிவியல் அறிஞர். குறுக்கீட்டு விளைவின் (Interference) அடிப்படையில் புகைப்படம் மூலமாக வண்ணங்களைப் பிரதியெடுத்த இவரது ஆய்வுகளுக்காக 1908 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

பிரெஞ்சு -யூதத் தம்பதிகளுக்கு மகனாக 1845 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் நாள் லக்சம்பர்க்கில் உள்ள ஹாலரிக் என்ற ஊரில் காபிரியேல் லிப்மன் பிறந்தார். 

சிறு வயதில் இவருடைய கல்வி சிறப்பாக அமையவில்லை. கட்டுப்பாடற்ற மாணவராகவும் இருந்தார். 

தனக்குப் பிடித்த விவரங்களில் மட்டுமே ஆர்வம் செலுத்தினார். அதனால் ஆசிரியர் பயிற்சித் தேர்வில் தோல்வியடைந்தார். ஆனால் ஆர்வம் காட்டிய துறைகளில் அனைவரையும் விட சிறந்து விளங்கினார்.

1873 -ல் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அறிவியல் குழு ஒன்று ஜெர்மனியில் ஆய்வுகள் நடத்தச் சென்றது. 

அறிவியல் பயிற்றுவிக்கும் முறைகள் பற்றி ஆய்வு நடத்த இவரும் அக்குழுவில் ஒருவராக நியமிக்கப்பட்டார். 

அப்போது ஹெய்டல்பர்க்கில் வில்ஹெம் குனே, கிர்க்காஃப் என்ற அறிவியல் அறிஞர்களுடனும் பெர்லினில் ஹெல்ம் ஹோல்ட்ஸ் என்ற அறிவியல் அறிஞருடனும் இணைந்து பணியாற்ற வாய்ப்புப் பெற்றார்.

இவருடைய திறமை கருதி சார்போன் பல்கலைக் கழகத்தில் கணித இயற்பியல் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். 

மூன்று வருடங்கள் கழித்து 'ஆய்வியல் இயற்பியல்' (Experimental Physics) பேராசிரியராக அமர்த்தப்பட்டார். அதன் பிறகு சார்போனுக்கு இடம் பெயர்ந்த லிப்மன் அறிவியல் ஆய்வுக்கூடம் ஒன்றின் இயக்குநராக அமர்த்தப்பட்டார். 

இவருடைய இறுதிக்காலம் வரை இந்தப் பணியில் நிலையாக இருந்தார்.

லிப்மனின் சுயமாகச் சிந்தித்துச் செயல்படும் ஆற்றல், இயற்பியலில் மின்னியல், வெப்பவியல், வெப்ப இயக்கவியல், ஒளியியல் , ஒளிப்பட வேதியியல் ஆகியவற்றில் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கு உதவியது. 

இயற்பியலில் பல பிரிவுகளைல் பயன்படுத்தப்பட்டு வந்த பல திட்ட அளவுக் கருவிகளின் புனைதிறன் மற்றும் சீர்திருத்தங்களுக்கு இவர் காரணமாக இருந்தார்.

பாதரசத்திற்கும் அமிலத்திற்கும் இடையே கம்பியைச் செலுத்தும் போது மிகச் சிறிய அளவு மின்னோட்டம் அந்தக் கம்பியில் ஏற்படுகிறது என்றும் அதன் காரணமாக அது சுருங்குகிறது. 

கம்பியை எடுத்ததும் மின்னோட்டம் இல்லாததால் அது பழைய நிலைக்கு விரிகிறது என்றும் கண்டறிந்தார்.

*நுண்புழை மின்னழுத்த மானி*

ஹெய்டல்பர்க்கில் இவர் ஆய்வுகள் நடத்தியபோது, நுண்புழைத்தன்மைக்கும், மின்சாரத்திற்குமுள்ள தொடர்புகளைப் பற்றி ஆராய்ந்தார். 

மிக நுண்மையான, மிகச் சிறப்புபெற்ற 'நுண்புழை மின்னழுத்த மானி' ஒன்றை உருவாக்கினார். 

இது மிகக் குறைவான மின்னழுத்தத்தை அளக்க உதவியது, அதனால் இது இதயத்துடிப்பை வரை படமாக அளவிடும் (Electro Cardio Graph) கருவியில் பயன்பட்டது.

*வெப்ப இயக்கவியல்*

வெப்ப இயக்கவியல் ஆய்வுகளை மேற்கொண்ட லிப்மன் எந்த ஒரு வெப்ப இயக்க முறைக்கும், மீள்செயல் முறையும் உண்டு என்பதையும் அவ்வாறு மீள் செயல் முறை நடைபெறும் போது உண்டாகும் மாற்ற அளவைக் கணக்கிடப் பொதுவான தேற்றம் ஒன்றை லிப்மன் உருவாக்கினார்.


*லிப்மன் எடுத்த வண்ணப் புகைப்படங்கள்*

1886 ல் ஒளிப்படங்களை உருவாக்குவது பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். 

அதிலும் வண்ணப் புகைப்படங்களை எப்படி உருவாக்குவது என்று ஆராய்ந்தார். ஆனால் அதில் பல சிக்கல்கள் ஏற்பட்டதால் அதில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. 

ஆனாலும் தளராமல் மிகவும் பொறுமையாக ஆய்வுகளைத் தொடர்ந்து செய்து ஒளியின் நிறங்களைக் கொண்டு குறுக்கீட்டு விளைவு முறையில் வண்ணப் புகைப்படங்களை உருவாக்க முடியும் என நிரூபித்தார். 

இதை அறிவியல் சங்கத்திற்கு 1893-ல் முறையாக அறிவித்தார். தன்னால் எடுக்கப்பட்ட புகைப் படங்களையும் வழங்கினார். 1894 -ல் தன்னுடைய ஆய்வு முழுவதையும் ஆய்வுக்கட்டுரையாகத் தொகுத்து வெளியிட்டார்.

1895 -ல் ஒளிப்படங்களைப் பதிவு செய்யும் போது அவை தாமே நிர்ணயித்துக்கொள்கின்ற கால அளவிற்கான சமன்பாட்டை நீக்குவதற்கு ஒரு முறையை உருவக்கினார். 

இவர் கண்டுபிடித்த முறையில் வண்ணப்படம் எடுப்பது சிறப்பு என்றாலும் அதற்கான ஒளியை எடுத்துக்கொள்ளும் நேரம் (Exposure Time) அதிகமாக இருந்தது.

No comments:

Post a Comment