Thursday, 15 September 2022

நாம் சர்வ சாதாரணமாகப் பேசும் வார்த்தைகளுக்கு இவ்வள

 *நாம் சர்வ சாதாரணமாகப் பேசும் வார்த்தைகளுக்கு இவ்வளவு அர்த்தமா?


1. *அந்தி, சந்தி*: 

*அந்தி* : மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.

*சந்தி*: இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.

 2. *அக்குவேர், ஆணிவேர்* :

*அக்குவேர்* : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர். 

*ஆணி வேர்* : செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்.

3. *அரை குறை*:

*அரை* : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.

*குறை* : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது.

 4. *அக்கம்,பக்கம்*:

*அக்கம்*: தன் வீடும், தான் இருக்கும் இடமும்.

*பக்கம்*: பக்கத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்.

5. *அலுப்பு, சலிப்பு* :


*அலுப்பு*: உடலில் உண்டாகும் வலி.


*சலிப்பு*: உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்.


 6. *ஆட்டம் பாட்டம்* :


*ஆட்டம்* : தாளத்திற்கு தகுந்தவாறு ஆடுவது.


*பாட்டம்* : ஆட்டத்திற்குப் பொருத்தமில்லாமல் பாடுவது.


7. *இசகு, பிசகு*:


*இசகு*: தம் இயல்பு தெரிந்து ஏமாற்றுபவர்களிடம் ஏமாறுதல்.


*பிசகு*: தம்முடைய அறியாமையால் ஏமாறுதல்.


8. *இடக்கு முடக்கு*: 

*இடக்கு* : கேளியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல்.

*முடக்கு* : கடுமையாக எதிர்த்து, தடுத்துப் பேசுதல்.


9. *ஏட்டிக்குப் போட்டி* :


*ஏட்டி*: விரும்பும் பொருள் அல்லது செய்வது. ( ஏடம் : விருப்பம்) 


*போட்டி* : விரும்பும் பொருள், செயலுக்கு எதிராக வருவது.


10. *ஒட்டு உறவு* : 

*ஒட்டு* : இரத்த சம்பந்தம் உடையவர்கள்.

*உறவு* : கொடுக்கல் சம்பந்தமான வகையில், நெருக்கமானவர்கள்.

11. *கடை கண்ணி* :

*கடை*: தனித் தனியாக உள்ள வியாபார நிலையம்.

*கண்ணி* : தொடர்ச்சியாக அமைந்த கடைகள் , கடை வீதிகள்.

12. *கார சாரம்* : 


*காரம்* : உறைப்பு சுவையுள்ளது.


*சாரம்*: காரம் சார்ந்த சுவையுள்ளது.


13. *காடு கரை* :


*காடு* : மேட்டு நிலம் (முல்லை).

 

*கரை* : வயல் நிலம் .( மருதம், நன் செய் , புன்செய்).


14.*காவும் கழனியும்*:

*கா* : சோலை.

*கழனி*: வயல். (மருதம் ).

15. *கிண்டலும் கேலியும்*: 

*கிண்டல்* : ஒருவன் மறைத்த செய்தியை அவன் வாயில் இருந்து வாங்குவது.

*கேலி* : எள்ளி நகைப்பது.

16. *குண்டக்க மண்டக்க* :

*குண்டக்க* : இடுப்புப்பகுதி..

*மண்டக்க*: தலைப் பகுதி,

(சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது எனத் தெரியாமல் தூக்குவது,

வீட்டில் அந்தந்தப் பொருள் அங்கங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது)

17. *கூச்சல் குழப்பம்*:

*கூச்சல்* : துன்பத்தில் சிக்கி வாடுவோர் போடும் சத்தம். (கூ - கூவுதல்)

*குழப்பம்*: துன்பத்தின் மத்தியில் உண்டாகும் சத்தத்தைக் கேட்டு, வந்தவர்கள் போடும் சத்தம்.


18. *சத்திரம் சாவடி* :


*சத்திரம்* : இலவசமாகச் சோறு போடும் இடம் ( விடுதி ).


*சாவடி*: இலவசமாகத் தங்கும் இடம்.

 

19.*தோட்டம் துரவு* , *தோப்பு துரவு* :


*தோட்டம்* : செடி, கொடி, கீரை பயிரிடப்படும் இடம்.


*தோப்பு* : கூட்டமாக இருக்கும் மரங்கள்.


*துரவு*: கிணறு.


20. *நகை நட்டு* :


*நகை* : பெரிய அணிகலன்கள் (அட்டியல், ஒட்டியாணம்.)


*நட்டு* : சிறிய அணிகலன்கள்.


21. *நத்தம் புறம்போக்கு* :


*நத்தம்* : ஊருக்குப் பொதுவான மந்தை...


*புறம்போக்கு* : ஆடு, மாடு மேய்வதற்கு அரசு ஒதுக்கிய நிலம்.


22. *நேரம் காலம்* :


*நேரம்* : ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்துக் கொள்வது.


*காலம்* : ஒரு செயலைச் செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால அளவு.


23. *நொண்டி நொடம்* :


*நொண்டி* : காலில் அடிபட்டோ, குறையால் இருப்பவர்.


*நொடம்* : கை, கால் செயலற்று இருப்பவர்.


24. *பற்று பாசம்* :


*பற்று* : நெருக்கமாக உறவு கொண்டுள்ளவர்கள்.


*பாசம்* : பிரிவில்லாமல் மரணம் வரை சேர்ந்து இருப்பது...


25. *பழக்கம் வழக்கம்* :


*பழக்கம்* : ஒருவர் ஒரே செயலைப் பல காலமாகச் செய்வது.


*வழக்கம்* : பலர் ஒரு செயலைப் பலகாலம் (மரபுவழியாக ) கடைப்பிடித்துச் செய்வது.


26. *பட்டி தொட்டி* :


*பட்டி*: கால்நடைகள் (ஆடுகள்) வளர்க்கும் இடம் (ஊர்).


*தொட்டி* : மாடுகள் அதிமாக வளர்க்கும் இடம்.


27. *பேரும் புகழும்* : 


*பேர்* : வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பு, பெருமை. 


*புகழ்*: வாழ்விற்குப் பிறகும் நிலை பெற்றிருக்கும் பெருமை.


28. *பழி பாவம்* :


*பழி*: நமக்குத் தேவையில்லாத , பொருத்தமில்லாத செயலைச் செய்தால் இக்காலத்தில் உண்டாகும் அபச் சொல்.


*பாவம்* : தீயவை செய்து மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் நிகழ்ச்சி.


29. *பங்கு பாகம்*:


*பங்கு*: கையிருப்பு. பணம், நகை, பாத்திரம்.( அசையும் சொத்து).


*பாகம்* : வீடு, நிலம். அசையாச் சொத்து.


30. *பிள்ளை குட்டி*:


*பிள்ளை* : பெதுவாக ஆண் குழந்தையைக் குறிக்கும்.

*குட்டி*: பெண் குழந்தையைக் குறிக்கும்.

31. *வாட்டம் சாட்டம்* : 

*வாட்டம்* : வளமான தோற்றம், வாளிப்பான உடல்.

*சாட்டம்* : வளமுள்ள தோற்றம், தோற்றப்பொலிவு.

No comments:

Post a Comment