Monday, 18 May 2020

இன்று

பெர்ட்ரண்டு ரஸ்ஸல்..!

பெர்ட்ரண்டு ஆர்தர் வில்லியம் ரசல், ஒரு பிரித்தானிய மெய்யியலாளர், கணித மேதை, ஏரணவியலர் (தருக்கவாதி), சமூக சீர்திருத்தவாதி, அமைதிவாதி ஆவார். வேல்சில் பிறந்த இவர் தனது வாழ்க்கையை பெரும்பாலும் இங்கிலாந்தில் கழித்தாலும், தான் பிறந்த இடமாகிய வேல்சில் இறந்தார்.

ரசல் 1900களின் தொடக்கத்தில் பிரித்தானிய இலட்சியவாதத்திற்கு எதிராகக் கிளர்ச்சி என்பதைத் தொடங்கினார், மேலும் பகுப்பாய்வுத் தத்துவம் என்பதை அவர் மாணவர் விட்கன்ஸ்டைன், பெரியவர் கோட்லோப் பிரேக் என்பவர்களுடன் சேர்ந்து நிறுவினார். ஏ. என். ஒயிட்ஹெட் உடன் சேர்ந்து, பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (கணிதத்தின் கோட்பாடுகள்) என்னும் நூலை எழுதி, கணிதத்தை தருக்கத்தின் அடிப்படையில் நிறுவ முயன்றார். அவரது தத்துவக் கட்டுரை "ஆன் டிநோட்டிங்" (On Denoting) "தத்துவத்தின் வழிகாட்டி எடுத்துக்காட்டு" எனக் கருதப்படுகிறது. இந்த இரு புத்தகங்களும் ஏரணம், கணிதம், மொழியியல், கணங்கள் கோட்பாடு, பகுப்பாய்வுத் தத்துவம் முதலியவற்றின் மேல் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தின.

ரசல் போர் மற்றும் காலனியத்தின் எதிர்ப்பாளர், தடையிலா வணிகத்தின் ஆதரவாளர் முதலாம் உலகப் போரின் போது தனது போர் எதிர்ப்புச் செயல்களால் சிறையில் அடைக்கப்பட்டார். இட்லருக்கு எதிராகப் பிரச்சாரம் நடத்தினார், சோவியத் ஒன்றியத்தின் வரம்பற்ற அதிகாரத்தை எதிர்த்தார். அணுகுண்டு கைவிடுதலையை ஆதரித்தார், அமெரிக்காவின் வியட்நாம் தலையீட்டை எதிர்த்தார்.

ரசலுக்கு, அவரின் பலவகைப்பட்ட எழுத்துகளினால், "மானுட இலட்சியங்களுக்காகவும், கருத்து சுதந்திரத்திற்காகவும்" 1950 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1949 ல் ”நான் நாத்திகனா, இறை ஐயம் கொண்டவனா” என்ற உரையில்,
நான் “தத்துவ அளவில் அல்லது தத்துவ அவையினர் முன்னிலையில் பேசுவதானால், என்னை இறை ஐயம் கொண்டவன் என வருணிக்க வேண்டும். ஏனெனில் ஆணித்தரமாக கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பதை உறுிப்படுத்துவதற்கு நிரூபணங்கள் இல்லை. அதே சமயம் சாதாரண மனிதனுக்கு என் எண்ணத்தை சொல்வதானால், என்னை நாத்திகன என வருணிக்க வேண்டும்" என்று கூறினார்.

பால்ய பருவத்தில் ரசல் நிரந்தர உண்மைகளுக்காக ஏங்கினார், அவருடைய புகழ்பெற்ற கட்டுரையான “சுதந்திர மனிதனின் துதி”, என்பதில் இயற்கைக்கு புறம்பான, அமானுஷ்ய நம்பிக்கைகளை வெறுத்தாலும், நான் வாழ்க்கையின் ஆழ்ந்த பொருளைப் பற்றி ஏக்கம் கொண்டுள்ளதாக ஒத்துக் கொண்டார்.

 ”நான் ஏன் கிருஸ்துவன் இல்லை” என்பது பற்றி 6 மார்ச் 1927 ல் பாட்டர்சீ நகர மாளிகையில், தேசீய மதசார்பற்ற சங்கத்தின் தெற்கு லண்டன் கிளையில் உரையாற்றினர், ஒரு வருடம் கழித்து அது துண்டுப்பிரசுரமாக வெளிவந்தது. அதில் கடவுள் நம்பிக்கையின் பல வாதங்களை அலசி, கிறிஸ்தவ இறையியல் பற்றியும் பேசுகிறார். அவருடைய முடிவு,

”மதம், முக்கியமாக அச்சத்தின் மேல் உண்டாக்கப்பட்டது என நினைக்கிறேன். அது ஒரு பகுதி நமக்கு தெரியாதவற்றைப் பற்றிய பீதி, மற்றொரு பகுதி நம் பக்கத்தில் ஒரு அண்ணன் இருந்து நம் துக்கங்களிலும் வாழ்க்கை கஷ்டகாலங்களிலும், சச்சரவுகளிலும் ஆதரவு கொடுப்பதாக ஒரு உணர்வு.......

ஒரு நல்ல உலகம், அறிவு, கருணை, திடமனம் இவற்றை வேண்டுகிறது. அது கடந்த காலத்தின் மீது பச்சாதாபமுள்ள புலம்பல்களையும், அறிவற்றவர்கள் சொன்ன வார்த்தைகளால் சிறைப்படுவதையும் வேண்டவில்லை”

 ரசல் அவர்களின்
 (Bertrand Arthur William Russell),
பிறந்த நாள் இன்று
(மே 18,1872)

No comments:

Post a Comment