Thursday, 19 March 2026

கல்வி உளவியல் Unit -3 கற்றல்

Psychology Unit 3 Notes | இரா.செந்தில்குமார்

கல்வி உளவியல் - அலகு 3: கற்றல்

இரா.செந்தில்குமார், B.T.ASST., காப்பரத்தாம்பட்டி

UNIT - 3 கற்றல்: பொருள் மற்றும் இயல்புகள்

கற்றல்: ஒரு உயிரியின் நடத்தையில் ஏற்படும் நிரந்தரமான மாற்றம் அல்லது மேம்பாடு ஆகும். இந்த நடத்தை மாற்றம் மரபினால் உருவாவது இல்லை; மாறாக, சூழ்நிலை அனுபவங்களால் கிடைப்பதாகும்.

  • முதிர்ச்சி என்பது கற்றலுக்கான தயார் நிலையைக் குறிக்கிறது.
  • முதிர்ச்சி கற்றலுக்குத் துணைபுரிகிறது மற்றும் உதவுகிறது.
  • முதிர்ச்சிக்குப் பின்னர் பெறும் கற்றலே தேர்ச்சியை விரைவுபடுத்தும்.
  • ஒரு குழந்தை பேசுவதற்கான முதிர்ச்சியை அடையும் முன்னரே பேச்சுப் பயிற்சியைத் தொடங்கினால், அந்த குழந்தையின் மொழித்திறன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

முக்கிய கற்றல் சோதனைகள்

கெல்லாக் மற்றும் கெல்லாக் சோதனை:

  • இவர்கள் ஒரு மனிதக் குரங்கையும் (சிம்பன்சி), ஒரு குழந்தையையும் ஒரே சூழலில் வளர்த்துச் சோதனை செய்தனர்.
  • நோக்கம்: விலங்குகளை மனிதச் சூழலில் வளர்ப்பதால், எந்த அளவுக்கு அவற்றால் மனிதத் தன்மையைப் பெற முடியும் என்பதை ஆராய்வதே இதன் நோக்கமாகும்.

கீஸஸ் மற்றும் தாம்சன் சோதனை:

  • இவர்கள் ஒருகரு இரட்டையர்களைக் கொண்டு மாடிப்படி ஏறும் பயிற்சியினை அளித்துச் சோதனை செய்தனர்.
  • நோக்கம்: முதிர்ச்சியின் முக்கியத்துவத்தை அறிவதும், முதிர்ச்சிக்குப் பின்னர் பெறும் கற்றலே விரைவான தேர்ச்சியைத் தரும் என்பதை உணர்வதும் ஆகும்.

வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் - பல்வேறு நிலைகள்

உடல் வளர்ச்சி: இதில் உடல் கூறு வளர்ச்சி (எலும்பு, உயரம், எடை மாற்றம்) மற்றும் உடலியல் வளர்ச்சி (இரத்த ஓட்டம், நரம்பு மண்டலம், சுவாசம், தசைத் தொகுதிகளின் மாற்றம்) என இருவகைப்படும்.

மன வளர்ச்சி / அறிவு வளர்ச்சி: இது கற்பனை செய்தல், சிந்தித்தல், ஆராய்ந்தறிதல், புலன்காட்சி, வேறுபடுத்துதல், பொதுமைப்படுத்துதல் மற்றும் நினைவிலிருத்தல் ஆகியவற்றில் ஏற்படும் முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

மனவெழுச்சி வளர்ச்சி: பயம், கோபம், மகிழ்ச்சி, அன்பு போன்ற உணர்ச்சிகளைப் பொருத்தமான நேரத்தில் வெளிப்படுத்துவதும், உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுமான முதிர்ச்சி நிலையாகும்.

சமூக வளர்ச்சி: தான் வாழும் சமூகத்தின் சட்டதிட்டங்களை மதிப்பதும், பிறருடன் பழகத் தேவைப்படும் திறன்களைப் பெறுவதும் ஆகும்.

ஒழுக்க வளர்ச்சி: சமூக அறநெறிகளை உணர்ந்து அதன்படி நடப்பதும், சரி மற்றும் தவறு எனப் பிரித்தறியும் ஒழுக்க உணர்வைப் பெறுவதும் ஆகும்.

கல்வி உளவியல் அறிவு ஆசிரியருக்கு ஏன் தேவை?

  • குழந்தைகள் குழவிப்பருவம், பிள்ளைப்பருவம் மற்றும் குமரப்பருவத்தைக் கடக்கும் போது, அந்தந்த பருவத்திற்கு ஏற்ப சிறந்த கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்த உதவுகிறது.
  • மாணவர்களிடம் காணப்படும் தனியாள் வேறுபாடுகளைக் கண்டறிந்து கற்பிக்க உதவுகிறது.
  • கற்றலில் சிறந்து விளங்கவும், கற்றலில் உண்டாகும் இடையூறுகளை நீக்கவும் இது அவசியம்.
  • மாணவர்களின் பொருத்தமற்ற நடவடிக்கைகளை இனம் கண்டு அவற்றைத் தீர்க்கவும், ஆளுமையை மேம்படுத்தவும் உதவுகிறது.
  • பரிசு மற்றும் பாராட்டு மூலம் மாணவர்களின் கற்றலை வலுப்படுத்த இது மிக முக்கியமான கருவியாக அமைகிறது.
CURIEYASITY DIGITAL

No comments:

Post a Comment